S2c பட்டா ஒரு பார்வை.

*S2c பட்டா ஒரு பார்வை*

2c பட்டா @ மரப்பட்டா @ மரவரி என்று சொல் வழக்கில் அழைப்படுவது கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவனமான கிராம கணக்கு என் 2சி -ல் பதியப்பட்டுள்ள விபரத்தை குறிக்கும்

கிராம கணக்கு எண்: 2 சி

கிராமத்தில் அரசு நிலங்கள் மற்றும் தனியாருக்கு பொது தோப்பு விதிகளின் கீழ் நீண்டகால குத்தகைக்கு விடப்பட்ட நிலங்கள் ஆகியவற்றில் உள்ள, பலன் தரும் மரங்களை காட்டும் பதிவேடாகும்.
இக்கணக்கு நான்கு பிரிவுகளாக எழுதப்பட வேண்டும். இப்பதிவேடு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.

பிரிவு :
1. அரசு தோப்புகள்
2. பொது உபயோகத்திற்கு விடப்பட்ட தனியார் தோப்புகள்
3. அரசால் வரி விதிக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடக்கும் மரங்கள்
4. உள்ளாட்சி துறையிடம் ஒப்படைக்கப்பட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்
2 சி பட்டா வழங்கப்பட்ட மரங்களுக்கு சரியான மரத்தீர்வையினை கணக்கிட்டு எழுதப்பட வேண்டும். ஒவ்வொ பசலியிலும் 2 சி மரங்களை பார்வையிட்டு 2 சி மரங்கள் இள மரங்களா காய்ப்புக்கு வந்து விட்டதா என்பதனை கண்டறிய வேண்டும். இளமரங்கள் காய்ப்புக்கு வந்து விடின் அதற்கான மர தீர்வைக்கு 2சி ஜாஸ்தி பட்டி கொடுத்து வட்டாட்சியரின் ஆணை பெற்று 2சி கேட்பில் சேர்க்க வேண்டும். அதே போன்று 2சி மரங்கள் பட்டு போனாலும் 2 சி கம்மி பட்டி கொடுத்து உரிய ஆணையினை வட்டாட்சியரிடமிருந்து பெற்று கேட்பிலிருந்து குறைக்க வேண்டும்.

2சி மரவரியானது பட்டாதாரரிடம் கிஸ்தி தொகையுடன் சேர்த்து வசூலிக்கக்கூடாது. இதனை தனி ரசீது மூலம் வசூலித்து கிராம 13ம் நெம்பர் கணக்கில் தனி பக்கத்தில் வசூல் விவரத்தைப் பதிந்து மொத்த தொகையினை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எஸ்.எப்.டி கணக்குகளில் தனியே செலுத்து சீட்டு மூலம் செலுத்தப்பட வேண்டும். 2சி மரவரியை 7ம் நெம்பர் மற்றும் 10ம் நெம்பர் கணக்குகளில் கொண்டு வரக்கூடாது.
அரசாணை நிலை எண்:864 வருவாய்த்துறை நாள்.30.8.96 ன்படி கீழ்கண்டவாறு மரவரி வசூலிக்க ஆணையிடப்பட்டுள்ளது.

வ.எண் மரத்தின் வகை மரவரி ரூபாய்
1. புளி 6
2. மா 6
3. தென்னை 8
4. பனை 1
5. பலா 6
6. இலுப்பை 1.25
7. கொய்யா 3
8. கருவேப்பிலை 3

2சி பட்டா வழங்கும்போது, 2சி உரிமையை மாற்றம் செய்ய அதிகாரம் இல்லை என்றும், அவ்வாறு மாற்றம் செய்தால், பட்டா ரத்து செய்யப்படும் என்றும் இந்த நிபந்தனையினை, இதர நிபந்தனைகளுடன் சேர்த்து குறிப்பிடப்பட வேண்டும்.

அரசாணை 2772 நாள். 4.1.77 ன் படி 2சி பட்டா வழங்கப்படாத பஞ்சாயத்துக்கு ஒப்படைக்கப்படாத அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் உள்ள மரங்களின் (செக்ஷன் 1ல் கண்டுள்ள மரங்கள்) மகசூலை ஒவ்வொரு ஆண்டும் பசலி துவக்கத்தில் வருவாய்த்துறையினரால் விடுப்பாடு இல்லாமல் மகசூல் ஏலம் விடப்பட வேண்டும்.

ஊராட்சிக்கு பங்கு தொகை

நடப்பு ஆண்டில் ஏலம் விடப்படும் தொகை கடந்த மூன்று ஆண்டுகளில் அதிக பட்ச ஏலத்தொகைக்கு குறைவாகவோ அல்லது இதே தொகையாகவோ இருப்பின் மேற்படி தொகை முழுவதும் ஊராட்சி ஒன்றியத்தில் செலுத்தப்பட வேண்டும். மேற்படி ஏலத் தொகை கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச ஏலத்தொகைக்கு கூடுதலாக இருப்பின் மேற்படி கூடுதல் ஏலத் தொகையில் 1/3 பாகமும் ஏலத் தொகையும் பஞ்சாயத்து கணக்கிலும் எஞ்சிய 2/3 பங்கு கூடுதல் தொகை வருவாய்த்துறை கணக்கில் “029தலவரி, மரவசூல் மற்றும் இதர வரவுகள்” என்ற தலைப்பின் கீழ் செலுத்தப்பட வேண்டும்.

Comments