தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சி எடுத்து விற்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் கு. வி. மு. ச பிரிவு 138 ன் கீழ் தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதற்கு என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்?

தனியாருக்கு சொந்தமான பட்டா நிலங்களில் நிலத்தடி நீரை ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சி எடுத்து விற்கப்படுவதை மாவட்ட நிர்வாகம் கு. வி. மு. ச பிரிவு 138 ன் கீழ் தடை செய்து உத்தரவு பிறப்பிப்பதற்கு என்ன நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்? 

கு. வி. மு. ச பிரிவு 138 ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன் கு. வி. மு. ச பிரிவு 133 ல் கூறப்பட்டுள்ளதுபோல் ஒரு நிபந்தனை உத்தரவை (Conditional Order ) பிறப்பிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அந்த நபர் அப்புறப்படுத்த வேண்டும் என்கிற நிபந்தனை குறிப்பிட்டு விளக்கம் கேட்டு அறிவிப்பு அனுப்பப்பட வேண்டும். 

கு. வி. மு. ச பிரிவு 133 ல் கூறப்பட்டுள்ள படி, ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு பிறகு அந்த நபர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அப்புறப்படுத்துவதற்கு ஆட்சேபனை ஏதும் தெரிவித்தால், அவரை அந்த உத்தரவை பிறப்பித்த நிர்வாக குற்றவியல் நடுவர் முன்பு அல்லது அந்த நிர்வாக நடுவருக்கு கீழுள்ள ஏதேனும் ஒரு நிர்வாக நடுவர் முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் முன்னிலையாக வேண்டுமென கட்டளையிட வேண்டும். அவ்வாறு நிர்வாக நடுவர் முன்பு முன்னிலையானதற்கு பிறகு, அந்த இடைக்கால உத்தரவை ஏன் நிரந்தர உத்தரவாக மாற்றக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்கும்படி அந்த உத்தரவினால் பாதிக்கப்பட்ட நபரிடம் கோர வேண்டும். 

குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும் போது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 134 ல் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை நிர்வாகத்துறை நடுவர் கடைபிடிக்க வேண்டும். அதேபோல் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல் அந்த உத்தரவு படிவம் 20 ல் பிறப்பிக்கப்பட வேண்டும். ஒரு நபரின் பெயரை குறிப்பிட்டு, அந்த நபரை பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதை அப்புறப்படுத்த வேண்டுமென்கிற கட்டளையோடு அந்த உத்தரவானது அமைந்திருக்க வேண்டும். 

பிரச்சினை சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் வாதங்களை கேட்டறியாமல் அவர்களுடைய செயல்பாடுகளுக்கு தடை விதித்து கு. வி. மு. ச பிரிவு 138 ன் கீழ் ஒரு இறுதி உத்தரவை நிர்வாகத்துறை நடுவர் பிறப்பிக்க முடியாது  குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஒரு நிர்வாக நடுவர் ஒட்டு மொத்தமாக ஒரு தடை உத்தரவை பிறப்பிப்பதற்கு அவருக்கு அதிகாரம் அளிக்கவில்லை. 

நிர்வாக நடுவர் கு. வி. மு. ச பிரிவு 138 ல் கூறப்பட்டுள்ளது போல் அழைப்பாணை வழக்குகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை பின்பற்றி சாட்சிகளை விசாரிக்க வேண்டும். கு. வி. மு. ச பிரிவு 133 ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு விளக்கம் கேட்டு அனுப்பிய அறிவிப்புக்கு அந்த நபர்கள் நேரில் முன்னிலையான நிலையில் அந்த வழக்கிலுள்ள ஆதாரங்களை பரிசீலனை செய்து அந்த நிபந்தனை உத்தரவை, நிரந்தர உத்தரவாக நிர்வாகத்துறை நடுவர் பிறப்பிக்க வேண்டும். 

நிர்வாகத்துறை நடுவர் ஒரு தடையுத்தரவை கு. வி. மு. ச பிரிவு 133 ன் கீழ் பிறப்பிப்பதற்கு முன்பாக முதல்நிலை உத்தரவை பிறப்பிக்கலாம். 

எந்தவொரு நபருக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில், ஒரு குறிப்பிட்ட செயலை செய்யும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோ, அந்த நபர் கு. வி. மு. ச பிரிவு 135 ல் கூறப்பட்டுள்ள படி, அந்த உத்தரவு குறித்து விளக்கமளிப்பதற்கு அந்த நபருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 

எனவே நிர்வாகத்துறை நடுவர் கு. வி. மு. ச பிரிவு 138 ன் கீழ் நிரந்தர தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக கு. வி. மு. ச பிரிவுகள் 133 மற்றும் 138 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றி தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 

CRL. RC. NO - 534/2011 

தேதி - 4.8.2011 

மேற்கண்ட தீர்ப்பினை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. 

CRL. RC. (MD) NO - 135/2013 
CRL. RC. (MD) NO - 270-279/2013
CRL. RC. (MD) NO - 449&450/2012 

Date - 16.2.2015 

K. பச்சைபெருமாள் Vs வருவாய் கோட்ட அலுவலர் மற்றும் உட்கோட்ட நடுவர், கோவில் பட்டி, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பலர் 

2015-2-MLJ-CRL-380

Comments