2வது மனைவி - சட்டத்தின் பார்வையில் :- நம் நாட்டு இந்துக்களை பொறுத்தவரை பாலிகமி எனப்படும்.

2வது மனைவி - சட்டத்தின் பார்வையில் :- நம் நாட்டு இந்துக்களை பொறுத்தவரை பாலிகமி எனப்படும்

 இருதாரமணம் நம் நாட்டில் தடை செய்யப்பட்டிருப்பதால் முதல் மனைவி உயிரோடிருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டால், அந்த இரண்டாவது திருமணம் செல்லாது (Section 5 & 11 The Hindu Marriage Act).

 இரண்டாவது திருமணம் இந்து சம்பிரதாய முறைப்படி செய்யப்பட்டிருந்தாலும், பதிவு செய்யப்பட்டாலும், அக்கணவனின் முதல் மனைவி, இரண்டாவது திருமணம் நடக்கும் போது உயிருடன் இருந்தால், இரண்டாவது திருமணம் செல்லாது. 

முதல் மனைவியின் முழு சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்திருந்தாலும் அது சட்டப்பூர்வமாக செல்லாது என்ற நிலையில் மாற்றம் இல்லை. முதல் மனைவி உயிருடன் இல்லை என்றாலோ, விவாகரத்து பெற்றிருந்தாலோ, முதல் திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் கூறியிருந்தாலோ, முதல் மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக யாராலும் பார்க்கப்படாமலோ, கேள்விபடாமலோ இருந்தாலும், இரண்டாவது திருமணம் செல்லும். 

ஆனால் கணவன் தன்னுடைய முதல் திருமணம் பற்றி இரண்டாவது மனைவியிடம் கூறியிருக்க வேண்டும். முதல் மனைவி உயிரோடிருக்கும் போது கணவன் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால், முதல் மனைவி கணவனை தண்டிக்க இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 494ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம். 

ஆனால் இதனால் கணவனுக்கு தண்டனை கிடைக்குமே தவிர வேறு எந்த நிவாரணங்களும் கிடைக்காது. ஆனால் விவாகரத்து சட்டத்தின் கீழ் அலிமனி எனப்படும் ஜீவனாம்சமோ அல்லது கு. வி. மு. ச பிரிவு 125ன் கீழ் ஜீவனாம்சம் கோருவதுடன், பராமரிப்பு தொகை எனப்படும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுகளுக்கும் பணம் கேட்டு உரிமையியல் நடவடிக்கை எடுக்கலாம்  ஆனால் இந்த நடவடிக்கையில் கணவனுக்கு தண்டனை ஏதும் கிடையாது. 

ஒருவேளை ஜீவனாம்சம் தர தவறும் கணவரை சிறையில் அடைக்க வழிவகை உண்டு. முதல் மனைவிக்கு சில நிவாரணங்கள் சட்டத்தில் வழங்கப்பட்டிருப்பது போல், எந்த ஒரு நிவாரணமும் இரண்டாவது மனைவிக்கு கிடையாது. 

முதல் மனைவி உயிரோடிருக்கும் போது கணவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு கணவன் மீதோ, அவனது சொத்துக்கள் மீதோ எந்தவித உரிமையும் கிடையாது. அதாவது அவருக்கு மனைவி என்ற சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடையாது.

 சாதாரணமாக, அத்தகைய இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்ச உரிமை கூட கிடையாது. ஆனால் அந்த இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தைகள் அக்கணவனின் சட்டப்பூர்வமான குழந்தைகள் ஆவார்கள். அந்த குழந்தைகளுக்கு கணவனின் சுய சம்பாத்திய சொத்தில் முழு உரிமை உண்டு. ஆனால் கணவனின் பூர்வீக சொத்தில் உரிமை ஏதும் கிடையாது.

 ஏற்கனவே திருமணமான ஒரு ஆண் அதனை மறைத்து இன்னொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட பிறகு அவளை கைகழுவி விட்டால், அப்பாவியான அந்த பெண் ஏமாற்றிய கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கேட்கலாமா? என்று பார்த்தால் சட்டப்படி முடியாது என்றே நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறியுள்ளது. 

உதாரணமாக, " Savitaben Somabhai Chatiya Vs State of Gujarat and Others, (Appeal No - 399/2005, DT - 10.3.2005) என்ற வழக்கில் சவிதாபென் என்ற பெண் 1994 ஆம் ஆண்டில், தனது மத சம்பிரதாயப்படி திருமணம் செய்து கொண்டாள்.

 துவக்கத்தில் அவளது கணவன் அவளை அன்பாக நடத்தினான். இந்த இனிய வாழ்க்கையின் விளைவாக அவள் ஒரு குழந்தைக்கு தாயானாள். அதன்பிறகு அவள் கணவனால் மனதளவிலும், உடல் அளவிலும் சித்ரவதைக்கு ஆளானாள். 

மேலும் அவள் தன் கணவனுக்கும், வீணாபென் என்ற பெண்ணுக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பதையும் அறிந்து கொண்டாள். இதனால் ஏமாந்த அவள் தனக்கும், தன் குழந்தைக்கும் ஜீவனாம்சம் கேட்டு கணவன் மீது கு. வி. மு. ச பிரிவு 125ன் கீழ் (Section 125 of Crpc) குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தாள். 

அந்த வழக்கில் அவளுடைய கணவன் சவிதாபென் தன்னுடைய சட்டப்பூர்வமான மனைவி இல்லை என்றும், தனக்கும், வீணாபென் என்ற பெண்ணுக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் கூறி வாதிட்டான். 

அதற்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வருங்கால வைப்பு நிதி கணக்கு ஆகியவற்றில் அவனது மனைவி என வீணாபென் பெயரை குறிப்பிட்டிருக்கிறார் ஆவணங்களை தாக்கல் செய்தான். இருந்தபோதிலும் குற்றவியல் நடுவர், மனுதாரரான சவிதாபென் மற்றும் அவரது குழந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என கணவனுக்கு உத்தரவு பிறப்பித்தார். 

குற்றவியல் நடுவரின் உத்தரவை எதிர்த்து கணவன் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தான். 

அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சவிதாபென் சட்டப்பூர்வமான மனைவி அல்ல என்றும், அதனால் சவிதாபென் ஜீவனாம்சம் கேட்க தகுதி அற்றவர் என்றும் ஆனால் குழந்தை அந்த கணவனின் சட்டப்பூர்வமான வாரிசு எனக்கூறி குழந்தைக்கான பராமரிப்பு தொகையை ரூ. 350லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது.

 அந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சவிதாபென் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் "Crpc sec 125 ஆனது முறையற்று பிறந்த குழந்தைகளுக்கும் (Illegitimate Children) பராமரிப்புத் தொகை வழங்க வகை செய்கிறது. ஆனால் சட்டப்பூர்வமற்ற (இரண்டாவது) மனைவியை அதில் சேர்க்கவில்லை. இவ்வாறு போதுமானதற்றதாக உள்ள சட்டம் (In adequacy of law), முதல் திருமணத்தை மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனுடன், இரண்டாவது மனைவியாக உறவு கொண்ட பெண்ணுக்கு எதிராக கொடூரமாக உள்ளது. 

இந்த குறைபாட்டை புதிய சட்டத்தால் மட்டுமே சரிப்படுத்த முடியும் என்று கருத்து தெரிவித்தது. இந்த தீர்ப்பு Crpc sec 125 ன் கீழ் ஜீவனாம்சம் கோரும் உரிமையை சட்டப்பூர்வமற்ற இரண்டாவது மனைவிக்கு விரிவுபடுத்த இயலாது என்பதை தெளிவுபடுத்தியதுடன், 2001 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தத்தை கருத்தில் கொண்டு, மேற்படி Crpc sec 125ல் இரண்டாவது மனைவி (சவிதாபென்) யின் குழந்தைக்கான பராமரிப்பு தொகையை ரூ. 500லிருந்து ரூ. 850 ஆக உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது. 

இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் பிரிவு 18 ( Sec 18 of The Hindu Adoption and Maintenance Act), பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பிரிவு 20 ( Sec 20 of the Protection of Women from Domestic Violence Act), இந்து திருமணச் சட்டம் பிரிவு 24 (Section  24 of The Hindu Marriage Act), குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125 ( Section 125 of Criminal Procedure Act) ஆகியன ஜீவனாம்சம் பெறுவதற்கான பெண்களின் உரிமை பற்றி கூறுகிறது. 

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது என்பது சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் வேறு சட்டங்களில் இரண்டாவது மனைவி ஏதாவது வாய்ப்பு உள்ளதா? என்ற இந்த கேள்விக்கு டெல்லி உயர்நீதிமன்றம் " நரேந்திர் கர் சாவ்லா Vs M. S. சாவ்லா" என்ற வழக்கில் இரண்டாவது மனைவி இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் பராமரிப்பு தொகையை பெறலாம் என்று கூறியுள்ளது.

 எந்த ஒரு குறிக்கோளை அடையும் வீட்டைச் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம் மற்றும் இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டனவோ, அதுபற்றி கூறுகையில் இத்தகைய சட்டங்களை இயற்றிய நாடாளுமன்றத்தின் நோக்கம் அல்லது எண்ணத்தை பற்றிய துணிவான விளக்கம் வழங்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறுகிறது. 

அதுபற்றி மேலும் கூறுகையில், இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் பெற தகுதி இல்லை என்று கூறுவது, தனது முதல் திருமணத்தை மறைத்து, இன்னொரு பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனுக்கு வெகுமதி அளிப்பது போலாகும் என்கிறது. 

இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் பிரிவு 18ன் கீழ் ஜீவனாம்சம் வழங்கும் போது, மேலே குறிப்பிட்ட நரேந்திர் கர் சாவ்லா வழக்கில் உள்ளது போல் இரண்டாவது மனைவியான பெண்களை சட்டப்பூர்வமான மனைவியாகவே கருதி ஜீவனாம்சம் பெற தகுதி உடையவராக்கலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 உச்சநீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகிய இரண்டு நீதிமன்றமயங்களின் சுருக்கமான கருத்து என்னவென்றால், சவிதாபென் வழக்கில், கணவன் தன் முதல் திருமணத்தை பற்றி தெரிவிக்காமல் ஏமாற்றி சவிதாபென்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட போதிலும், அந்த இரண்டாவது மனைவி சட்டப்பூர்வமான மனைவி அல்ல, 

அதனால் Crpc sec 125 ன் கீழ் ஜீவனாம்சம் பெற தகுதி இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. ஆனால் அதற்கு மாறாக டெல்லி உயர்நீதிமன்றம், முதல் திருமணத்தை மறைத்து, கணவனால் ஏமாற்றப்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்பட்ட பெண் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட "இந்து மனைவி" யாக கருதப்படலாம் என்றும், அந்த அடிப்படையில் அந்த இரண்டாவது மனைவி "இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம்" பிரிவு 18ல் ஜீவனாம்சம் பெறத் தகுதி உள்ளவர் என்றும் கருதுகிறது. 

எனவே ஏமாற்றப்பட்ட இரண்டாவது மனைவி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 125ன் படி ஜீவனாம்சம் பெற முடியாது என்றாலும், இந்து மகவேற்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் பிரிவு 18 ன் கீழ் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெற தடை ஏதும் இல்லை.

Comments