*தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை*
*(TamilNadu Rural Development and Panchayat Raj Department* *தமிழக* *அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசுத் துறையாகும்.* *இத்துறை மக்களுக்கான அடிப்படை வசதிகள்,* *சேவைகளைத் தவிர வறுமை நிவாரணத் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சுகாதாரம், அரசு* *ஊழியர்களின் திறன்* மேம்படுத்தல், பெண்களின் சமூக, பொருளாதார மேம்பாடு, சுனாமியினால் பாதிப்படைந்தவர்களுக்குப் புனர்வாழ்வு போன்ற பல சமூக நலத்திட்டங்களில் மைய அரசு மற்றும் மாநில அரசின் நிதி மற்றும் பிற வெளிநாட்டு நிறுவனங்களின் (ஆசிய வளர்ச்சி வங்கி, உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) ஆதரவு பெற்ற உதவித் திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பிலுள்ளத் துறையாகும். இவை தவிரப் பல்வேறு ஊராட்சி நிறுவனங்கள் தன்னாட்சி அரசுப் பிரிவுகளாகத் திறனுடன் செயற்படுவதற்காக இத்துறையிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் 12,524 கிராம ஊராட்சிகள் (பஞ்சாயத்துகள்), 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் செயல்படுகிறது.[1]
வளர்ச்சித் திட்டங்கள்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பொறுப்பில் தற்பொழுது உள்ள வளர்ச்சித் திட்டங்களின் பட்டியல் (முழுமையானதல்ல).
மைய அரசின் திட்டங்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்
இந்திரா அவாஸ் யோஜனா
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சித் திட்டம்
மாநில அரசின் திட்டங்கள்
தமிழகக் கிராம குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் அப்படி என்றால் என்ன
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடுத் திட்டம்
கிராம தன்னிறைவுத் திட்டம்
சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்
வெளியிணைப்புகள்
*ஊரகம் , ஊராட்சி என்றால் *என்ன ? அவற்றின்* *கடமைகள் பற்றிய விளக்கங்கள்.*
*ஊரகம் , ஊராட்சி என்றால்* *என்ன ? அவற்றின் கடமைகள் பற்றிய விளக்கங்கள்*
*தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல் மற்றும்* *பராமரித்தல், துப்புரவுப் பணிகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் போன்றவற்றை முனைப்புடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மேற்கொண்டு வருகிறது.* *மேலும், பள்ளி கட்டிடங்கள் கட்டுதல், அவற்றில் குடிநீர் வசதி, கழிப்பறை போன்ற கட்டமைப்பு வசதிகளை அமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகிய முக்கிய பணிகளையும் இத்துறை செயல்படுத்தி வருகிறது*.
*ஊரக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைத்தல் மற்றும் பராமரித்தல், பொதுக்கழிப்பிடம், தனிநபர் கழிப்பிடங்களை அமைத்தல் மற்றும் சுகாதாரத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற* பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் வேலைவாய்ப்பினை உறுதிசெய்து அவர்கள் அரசு நிர்ணயித்த ஊதியத்தினை பெற்றிட வழிவகை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் கிராம மக்களின் வறுமை ஒழிப்பு, கிராமப்புற மகளிர் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் போன்றவற்றை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்படுத்தி வருகின்றது.
மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகள் :
73வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம், 1993-ல் கொண்டு வரப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ல் இயற்றப்பட்டது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் மூன்றடுக்கு ஊராட்சி முறை அதாவது, அடித்தள அமைப்பாக கிராம ஊராட்சி, இடைநிலையில் வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றடுக்கு ஊராட்சிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து ஊரக வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நோக்கம் :
அடிப்படை வசதிகளான குடிநீர் வழங்கல், தெருவிளக்குகள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், ஊரக துப்புரவுப் பணிகள், சாலைகள், வடிகால் வசதிகள் மேற்கொள்ளுதல் மற்றும் பராமரித்தல் ஆகியவை கிராம ஊராட்சியின் முக்கிய பொறுப்பாகும். அனைத்து தனிநபர் பயன்பெறும் திட்டங்களில் பயனாளிகள் கிராம ஊராட்சிகள் மூலமே கண்டறியப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு கிராம சபை ஒப்புதல் அளிக்கிறது. இடைநிலை ஊராட்சியான வட்டார ஊராட்சி வலுவான நிர்வாக அமைப்பும், தொழில்நுட்ப பிரிவும் கொண்டுள்ளதால் ஊரக வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் கிராம ஊராட்சியுடன் இணைந்து பங்காற்றுகிறது. திட்ட ஒருங்கிணைப்பு, ஆய்வு மேற்கொள்ளுதல் ஆலோசனை வழங்குதல் மற்றும் கண்காணிக்கும் அமைப்பாக மாவட்ட ஊராட்சி திகழ்கிறது. மூன்று அடுக்கு ஊராட்சி அமைப்புகள் தங்களின் சட்டப்படியான விருப்பக் கடமைகள் மற்றும் ஆய்வு செய்யும் கடமைகளோடு ஒப்படைக்கப்பட்ட பிற பணிகளையும் செய்து வருகின்றன.
நிர்வாக அமைப்பு :
மாநில அளவில்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிர்வாகத்தை, நகராட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருக்கு உதவி புரிந்து வருகிறது. தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர், மகளிர் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாவார். கிராமப்புற ஏழை மக்களை ஆற்றல்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் திட்ட இயக்குநர், புது வாழ்வு திட்டம் தலைமையில் செயல்படுத்தப்பட்டுவருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், வாழ்வாதாரத் திட்டங்களை செயல்படுத்தவும் திட்ட இயக்குநர் தலைமையில் ஒரு அலகு செயல்பட்டு வருகிறது.
மாவட்ட அளவில் :
மாவட்ட ஆட்சித் தலைவர் மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளின் ஆய்வாளராக செயல்படுகிறார். மாவட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ளும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு மாவட்ட ஆட்சியரே தலைவராவார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் திட்ட இயக்குநர், திட்டப் பணிகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியருக்கு உதவிபுரிகிறார். ஒவ்வொரு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலும், நிர்வாக பொறியாளர் தலைமையில் ஒரு பொறியியல் பிரிவு இயங்கி வருகிறது. உதவி இயக்குநர் நிலையிலான ஒரு செயலாளர், மாவட்ட ஊராட்சியில் பணிபுரிகிறார். அத்துடன், இவர் பதவிவழி மாவட்ட திட்டக் குழுவின் செயலாளராகவும் உள்ளார். மேலும், நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தில் உதவி புரிகின்றனர்.
வட்டார அளவில் :
வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆவார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி), கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறார். ஒவ்வொரு வட்டார ஊராட்சியிலும் ஒன்றியப் பொறியாளர் / உதவிப் பொறியாளர், பணிமேற்பார்வையாளர் மற்றும் சாலை ஆய்வாளர் ஆகியோர் தொழில்நுட்பப் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்பொறியாளர்களின் செயல்பாடுகள் உட்கோட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளர்களால் கண்காணிக்கப்படுகிறது.
கிராம ஊராட்சி அளவில்
கிராம ஊராட்சித் தலைவரே கிராம ஊராட்சியின் செயல் அலுவலரும் ஆவார். தலைவர் மற்றும் துணைத்தலைவர் அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளரால் (மாவட்ட ஆட்சித் தலைவர்) நியமிக்கப்படும் கிராம ஊராட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கிராம ஊராட்சி கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்களுக்கான காசோலைகளில் ஒப்பம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சித் தலைவருக்கு கிராம ஊராட்சி செயலாளர் நிர்வாகத்தில் உதவி புரிகிறார்.
ஊராட்சி நிர்வாகம் :
கிராம ஊராட்சியின் கடமைகள்
மூன்றடுக்கு ஊராட்சிகளிலேயே, அடிப்படை வசதிகளை உருவாக்கி, அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பில் இருந்து செயல்படும் அமைப்பாக, கிராம ஊராட்சிதான் விளங்குகிறது. இந்த அமைப்பு, மக்களுக்கும், அரசுக்கும் பாலமாக செயல்படுகிறது.
கட்டாயக் கடமைகள் :
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 110ல் கீழ்க்கண்டவற்றை கிராம ஊராட்சிகளின் கட்டாயக் கடமைகளாக வகைப்படுத்தியுள்ளது.
•கிராம ஊராட்சி சாலைகளை அமைத்தல், அத்தகைய சாலைகளில் பாலங்கள் மற்றும் கல்வெட்டுகள் போன்றவற்றைக் கட்டுதல், தெருக்களை மேம்பாடு செய்தல் மற்றும் அவற்றை அவ்வப்போது பழுதுபார்த்துப் பராமரிப்பு செய்தல்.
•குடியிருப்புப் பகுதியில், பொதுச் சாலைகள், தெருக்கள், பொதுமக்கள் கூடுமிடங்கள் போன்ற பகுதிகளில் தெரு விளக்குகளை அமைத்துப் பராமரித்தல்.
•பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைக்க வகை செய்தல். இதற்கென உரிய திட்டங்களை நேரடியாகவோ, ஊராட்சி ஒன்றியங்கள் அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாகவோ செயல்படுத்துதல், விசைப்பம்புகள், கைப்பம்புகள், பொதுக் குழாய்கள் போன்றவற்றை நிறுவுதல், வாய்ப்புள்ள இடங்களில் வீட்டு இணைப்பு வழங்குதல் மற்றும் அத்தகைய குடிநீர் திட்டங்களைப் பராமரித்தல்.
•கிராமப்புறங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தப் பொது கழிப்பிடங்கள் கட்டுதல், பள்ளிகளில் சுகாதார வசதிகளை நிறுவுதல், வீடுகளில் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள மக்களுக்கு உதவி செய்தல், இதன் மூலம் கிராமப்புற சுற்றுச் சூழல் மாசுபடுவதைத் தடுத்து தனிநபர் சுகாதார வசதியை மேம்படுத்துதல்.
•கிராமப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தவிர்க்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், குறிப்பாக நீர்நிலைகள் மாசுபடுவதைத் தடுத்தல், கழிவு நீர்க் கால்வாய்கள் அமைத்து குப்பைகளையும், கழிவுகளையும் தெருக்களில் இருந்து அகற்றுதல், மரங்களை நட்டு சுற்றுச் சூழலைப் பாதுகாத்தல்.
•பொது மக்களின் சுகாதாரத்திற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள புதர்கள், முட்செடிகள், பாழுங்கிணறுகள், சுகாதாரக் கேடான குளங்கள் மற்றும் குட்டைகளை அகற்றுதல்.
•இடுகாடு மற்றும் சுடுகாடு ஆகியவற்றை அமைத்துப் பராமரித்தல்.
•கிராம நத்தங்களை விரிவுபடுத்துதல் மற்றும் கட்டடங்களை ஒழுங்குபடுத்துதல்.
•கிராமப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் அரசால் ஒப்படைக்கப்படும் மத்திய, மாநில அரசின் பிற திட்டங்களை செயல்படுத்துதல்.
•அரசு அவ்வப்போது ஒப்படைக்கும் பிற கடமைகளை ஆற்றுதல்.
விருப்பக் கடமைகள் :
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 111-ன் படி பின்வரும் கடமைகளை தேவைக்கேற்பவும், நிதி ஆதாரங்களைக் கணக்கில் கொண்டு கிராம ஊராட்சிகள் மேற்கொள்ளலாம்.
•சாலைகளில் இருபுறமும் மரக் கன்றுகளை நட்டுப் பராமரித்தல்.
•குடியிருப்பு மற்றும் கட்டடங்கள் உள்ள பகுதிகளுக்கு அப்பால் உள்ள சாலைகளிலும் தெரு விளக்குகள் அமைத்துப் பராமரித்தல்.
•பொது சந்தைகள் அமைத்துப் பராமரித்தல்.
•உள்ளூர் திருவிழாக்களிலும், சந்தைகளிலும் சுகாதார வசதிகள் செய்தல்.
•வண்டி நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம், கால்நடைத் தொழுவங்கள் ஆகியவற்றைப் பராமரித்தல்.
•இறைச்சிக் கூடங்கள் அமைத்தல்.
•பயணிகள் தங்குமிடங்களை அமைத்துப் பராமரித்தல்.
•படிப்பகங்கள் ஏற்படுத்திப் பராமரித்தல்.
•வானொலி, தொலைக்காட்சி அறைகள், விளையாட்டுத் திடல்கள், பூங்காக்கள் அமைத்தல்.
•உடற்பயிற்சி நிலையங்களை அமைத்துப் பராமரித்தல்.
•முறைசாராக் கல்வி, சமூகக் கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி நிலையங்கள் அமைத்து நடத்துதல்.
கிராம ஊராட்சிக் குழுக்கள் :
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் கீழ்க்கண்ட குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும்.
•நியமனக்குழு
•வளர்ச்சிக்குழு
•வேளாண்மைக் குழு
•பணிகள் குழு
•கல்விக் குழு
நியமனக் குழு :
•கிராம ஊராட்சியில் ஊராட்சி நிதியில் ஊதியம் பெற அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை தேர்வு செய்வது இக்குழுவின் முக்கிய பணி ஆகும். இக்குழுவில் கிராம ஊராட்சித் தலைவரும், தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் இடம் பெறுவர்.
வளர்ச்சிக் குழு :
•இக்குழுவின் தலைவராக கிராம ஊராட்சியில் உள்ள பெண் உறுப்பினர்களில் ஒருவர் இருப்பார். மேலும் இரண்டு உறுப்பினர்களும் இடம் பெறுவர்.
•மக்கள் நலம், சுகாதாரம், குடிநீர், சமுதாய சொத்துக்கள் ஆகியவற்றினை பராமரித்தல், தரம் உயர்த்துதல், தொற்று நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு முகாம் அமைத்தல், தடுப்பூசி முகாம்கள் அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்.
வேளாண்மைக் குழு :
•இக்குழுவின் தலைவர், கிராம ஊராட்சியின் உறுப்பினர்களுள் ஒருவராவார். நீர்பாசன ஆதாரங்களில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்த விவசாய குழுக்களை ஏற்படுத்துதல், வேளாண்மை, தோட்டக்கலை, பட்டு வளர்ப்பு, பால் பண்ணை, தரிசு நில மேம்பாடு, வறட்சிப் பணி மேம்பாடு, சமூக காடுகள், நில மேலாண்மை மற்றும் மண் அரிப்பு தடுப்பு போன்ற நடவடிக்கைகளில் கிராம ஊராட்சிக்கு உதவுதல் போன்ற முக்கிய பணிகளை இக்குழு மேற்கொள்ளும்.
பணிகள் குழு :
•மத்திய, மாநில அரசுத் திட்டங்களை தரத்துடன் உரிய காலத்தில் நிறைவேற்றவும், கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள உள்ளூர் வள ஆதாரங்களைப் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை தயாரிக்கவும், இக்குழு கிராம ஊராட்சிக்கு உதவியாக இருக்கும்.
கல்விக் குழு :
•கிராம ஊராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணித்தல், பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மக்களின் பங்கேற்பினைப் பெறுதல், மக்களிடையே முதியோர் கல்வி, நூலகப் பராமரிப்பு, எழுத்தறிவு ஆகியவற்றை ஏற்படுத்தும் முகாம்களை அமைத்தல் ஆகியவை இக்குழுவின் முக்கிய பணிகளாகும்
Comments
Post a Comment