திருமணம் தொடர்பாக மாப்பிள்ளையின் கவுரவத்தை காப்பாற்றும் நோக்கத்தில் மணப்பெண் வீட்டில் பணம், பொருட்கள் கொடுக்கும் பழக்கம் சமூகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. மனிதனின் கெட்ட ஆசை காரணமாக இது சமூகத்தில் பெரிய நோயாக மாறிவிட்டது. திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் சுய விருப்பத்தின் பேரில் கொடுக்க ஆரம்பித்த பணம், பொருள் உள்ளிட்ட பொருட்கள் தற்போது அவை கொடுக்கவில்லை என்றால் திருமணமில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியுள்ள வரதட்சணை என்ற கொடுமையை ஒழிக்கும் நோக்கத்தில் மத்திய அரசு வரதட்சணை தடுப்பு சட்டம்-1961 அமல்படுத்தியது.
வரதட்சணை என்றால் என்ன?
ஒருவர் தான் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்ள கொடுக்கப்படும் ஏதாவது ஒரு சொத்து அல்லது விலை உயர்ந்த பொருட்கள் சீதானமாக பெறுவதற்கு பெயர் வரதட்சணை என்று அர்த்தமாகும். இது போன்ற பேச்சுவார்த்தை திருமணத்திற்கு முன்பு அல்லது திருமணம் நடக்கும் நாளில் எழுப்பபடும். இதனால் பல திருமணங்கள் பாதியில் நின்றுள்ள சம்பவங்களும் நடந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கத்தில் கடந்த 1961ம் ஆண்டு வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் அடிப்படையில்
மணமகன் மணமகளுக்கு அல்லது மணமகள் மணமகனுக்கு: அல்லது
மணமகனின் பெற்றோர் அல்லது அவர்கள் சார்பில் வேறோருவர் சார்பாக
மணமகளின் பெற்றோர் அல்லது அவர்கள் சார்பில் வேரேருவர் திருமணம் நடைபெறும் சமயத்தில் அல்லது திருமணம் முடிந்த பின் இது தொடர்பாக பணமோ அல்லது பொருளோ வாங்கினால் அது வரதட்சணையாக கருதப்படும். திருமணத்தை அடிப்படையாக வைத்து யார் பணம், பொருள் பெறுவது தொடர்பாக ஒப்பந்தம் செய்துக்
கொண்டாலும், அதை வரதட்சணையாக கருதப்படும். அதே சமயத்தில் திருமணச் சட்டத்தின் படி வரதட்சணை கொடுப்பது சட்டப்படி குற்றமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகன் அல்லது அவரின் பெற்றோர் அல்லது பெற்றோர் வழி உறவினர்களுக்கு அன்பு பரிசாக மணப் பெண்ணின் பெற்றோரிடம் பரிசு பொருள், பணம், நிலம், வீடு உள்ளிட்ட பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது வரதட்சணை சட்டத்தின் கீழ் வருகிறது.
பரிசு வழங்குவது வரதட்சணை அல்ல:
திருமணத்தின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் கொடுக்கும் பரிசுகள் வரதட்சணையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயத்தில் இந்த பொருளை தான் கட்டாயமாக பரிசாக வழங்க வேண்டும் என்று யாரையும் வலியுறுத்த முடியாது. மேலும் பரிசு கொடுக்கும் நபரின் தனி தகுதி என்ன என்பதை அலசி, ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதே சமயத்தில் திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் சுய விருப்பத்தின் பேரில் தனது மகளின் தேவைகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை பரிசாக வழங்கினால், இது தொடர்பாக என்னென்ன பொருட்கள் வழங்கப்பட்டது என்பதை பட்டியலாக தயாரித்து, இதில் மணமக்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மூலம் கையெழுத்து மற்றும் கைரேகை பெற வேண்டும்.
வரதட்சணை கொடுப்பது அல்லது பெறுவது சட்டப்படி குற்றமாகும்:
வரதட்சணை கேட்பது, வரதட்சணை எடுத்துக் கொள்வது மற்றும் வரதட்சணை கொடுப்பது அல்லது இரண்டும் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் விவகாரம் நடத்துவது வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாக வரதட்சணை கேட்பது உறுதி செய்யப்பட்டால், குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைவாசம் கிடைக்கும். வரதட்சணை கொடுப்பது அல்லது கேட்பது உறுதி செய்யப்பட்டால், அத்தகைய நபருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதம், அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரதட்சணை வாங்கினால் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் வரதட்சணையாக கேட்கும் பணம் அல்லது பொருளின் மதிப்பு ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகம் இருக்கும் பட்சத்தில் தண்டனை மற்றும் அபராதமும் கூடுதலாகும்.
மேலும் வரதட்சணை கொடுப்பது தொடர்பாக மணமக்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதும் சட்டப்படி குற்றமாகும். இது தொடர்பாக இடைதரகர்களாக பேசுவோரும் தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்களுக்கும் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். ஒரு வேளை வரதட்சணை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பதிவாகி விசாரணை சமயத்தில் மணமகனின் பெற்றோர் கட்டாயப்படுத்தி வரதட்சணை வாங்கியது உறுதி செய்யப்பட்டால், வரதட்சணை கொடுத்த புகாரில் இருந்து மணமகளின் பெற்றோர் குற்றமற்றவராக விடுதலை செய்யப்படுவார்கள். மேலும் வரதட்சணை கொடுப்பது அல்லது வாங்குவது தொடர்பாக இரு குடும்பங்கள் இடையில் ஒப்பந்தம் செய்துக் கொண்டாலும் சட்டப்படி குற்றமாகும்.
வரதட்சணை யாருடைய சொத்து:
திருமணத்தின் போது வரதட்சணையாக மணமகனுக்கு கொடுக்கப்படும் பொருட்கள் யாரிடமிருந்தாலும், திருமண வரதட்சணை சட்டத்தின் அடிப்படையில் அது பெண்தானத்தின் ஒரு பாகமாகவே கருதப்படும். அந்த சொத்தை சுதந்திரமாக தனது தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் உரிமை பெண்ணுக்கு உள்ளது. முறைப்படி வரதட்சணையாக பெற்ற பணம், பொருளை மனைவிடம் ஒப்படைக்க வேண்டியது கணவரின் கடமையாகும். அதன்படி வரதட்சணையாக பெற்ற பணம் அல்லது பொருட்கள் திருமணத்திற்கு முன் வாங்கி இருந்தால், அதை வாங்கிய நாளில் இருந்து மூன்று மாதங்களுக்குள் அல்லது திருமண நாளில் வாங்கி இருந்தால், அந்நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் மனைவியிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரு வேளை 18வயது நிரம்பாத பெண்ணை திருமணம் செய்துக் கொண்டிருந்தால், அவளுக்கு 18 வயது நிரம்பிய நாளேன்றே ஒப்படைக்க வேண்டும்.
வரதட்சணை தொடர்பாக மேலே குறிப்பிட்ட காலத்திற்குள் மனைவியிடம் ஒப்படைக்காமல் போனால், கணவருக்கு குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். வரதட்சணையாக பெற்ற பொருளை மனைவி பெறாமல் மரணமடைந்து விட்டால், சீதனமாக கொடுத்த பொருளை வாபஸ் கேட்கும் உரிமை அவளின் பெற்றோருக்கு உள்ளது. அப்படி கேட்கும் போது திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் பெண் காலமாகும் போது பிள்ளைகள் இல்லாமல் இருந்தால், அவளிடம் உள்ள சொத்து பெற்றோருக்கும், குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கும் சொந்தமாகும். அதை முறைப்படி அவர்களிடம் வழங்க வேண்டும்.
வரதட்சணை மரணமென்றால் என்ன?
திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் தீ காயம் உள்பட பல வழிகளில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மரணமடைந்தால் மற்றும் இறப்பதற்கு முன் வரதட்சணை தொடர்பாக அவளின் கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் வரதட்சணை கேட்டு உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தினால், அதன் தொல்லை தாங்க முடியாமல் உயிரிழந்திருந்தால், அதை வரதட்சணை சாவு என்றே வழக்கு பதிவு செய்யப்படும். அது தண்டனைக்குறிய குற்றமாகும்.
வரதட்சணை மரணத்திற்கான தண்டனை:
வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் மரணமடைந்தது நீதிமன்றத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டால், அதற்கு காரணமானவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கப்படும். மேலும் மேலே குறிப்பிட்டப் படி திருமணமாகிய பின் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கணவர் அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ கொடுமைப்படுத்தி அவள் தற்கொலை செய்து கொண்டிருந்தால், அதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும்:
திருமணமான பெண்ணிடம் அவரது கணவர், அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் சட்ட விரோதமாக வரதட்சணை என்ற பெயரில் பணம், பொருள், நிலம் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கேட்டு துன்புறுத்தினால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.
என்ன மாதிரியான துன்புறுத்தல் என்றால்:
பெண் தற்கொலை முயற்சிக்கு செல்லும் வகையில்: அல்லது
பெண்களின் உடலில் தீ உள்பட காயம் ஏற்படும் வகையில் துன்புறுத்துவது: அல்லது
பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது, உடல் உறுப்புகள் இழக்கும் வகையில் தாக்குவது, மனதளவில் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது: அல்லது பெண்ணை நிம்மதியாக இருக்க விடாமல் வார்த்தைகளால் அவமதிப்பு செய்வது: அல்லது
பெண்ணிடம் அவரது கணவர், அல்லது மாமனார், மாமியார் அல்லது ரத்த சம்மந்தமான உறவினர்கள் சட்ட விரோதமாக வரதட்சணை என்ற பெயரில் பணம், பொருள், நிலம் உள்ளிட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கேட்டு துன்புறுத்துவது. மனைவியை மட்டுமில்லாமல் அவளது பெற்றோர் மற்றும் ரத்த சம்மந்தமான உறவினர்களை நிந்திப்பது.
திருமணமான பெண்ணை வரதட்சணை கேட்டு மணமுடித்த நாள் முதல் 7 ஆண்டுகளுக்குள் தீக்காயம், கொலை செய்யப்படுத்தும் ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது. ஒரு கட்டத்தில் வரதட்சணை கொடுமையால், பெண்ணை கொலை செய்வது அல்லது தற்கொலை செய்து கொள்ளும் வகையில் உடல்ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இம்சை கொடுத்ததை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 113 (பி) அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
திருமணமான பெண் 7 ஆண்டுகளுக்குள் மரணமடைந்தால், அந்த மரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும். அவரது மரணத்தின் பின்னால் வரதட்சணை கொடுமையால், பெண்ணை கொலை செய்வது அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் வகையில் உ.டல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ இம்சை கொடுத்ததை நீதி மன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால், இந்திய தண்டனை சட்டம் 113 (ஏ) அடிப்படையில் கடுமையான தண்டனை வழங்கப்படும்.
வரதட்சணை சட்டம் எப்படி பின்பற்றுவது:
வரதட்சணை கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசால் கடந்த 1961ம் ஆண்டு இந்திய வரதட்சணை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் 8வது பிரிவில் கீழ் வரதட்சனை புகாரை விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி நியமனம் செய்து கொள்ள கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இச்சட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனுதியும், ஆலோசனையும் வழங்க கர்நாடகாவுக்கு தனி அதிகாரமும் வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தி மாநில அரசு கர்நாடக மாநில வரதட்சணை தடுப்பு சட்டம்-2004 அமல்படுத்தி கடுமையான நிபந்தனைகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
இச்சட்டத்தின்படி வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்படும் பெண் அல்லது அவரது பெற்றோர், ரத்த சம்மந்தமான உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வு தொண்டு அமைப்புகள் கூட பாதிக்கப்பட்ட பெண் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். மேலும் இச்சட்டத்தை முழுமையாக செயல்பட கீழ் காணும் விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
வரதட்சனை கொடுமை தொடர்பாக பெண் கொடுக்கும் புகாரை மறுப்பு தெரிவிக்காமல் ஏற்று பதிவு செய்ய வேண்டும்.
வரதட்சணை புகார் கொடுத்த மாத்திரத்தில் நடவடிக்கை எடுக்காமல் விண்ணப்பத்தை சரியாக படிக்க வேண்டும். இது தொடர்பாக பல தரப்பில் விசாரணை நடத்த வேண்டும். இதில் புகார் கொடுத்த பெண்கள் கூறியுள்ளது விசாரணையில் உண்மை என்பது தெரியும் பட்சத்தில் தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இதுபோன்ற புகார் ஏற்கனவே பதிவாகி இருந்தால், அவ்வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் சமயத்தில் அரசுக்கு ஆதரவான அம்சங்களை தெரிவிக்க வேண்டும். மனுதாரருக்கு நியாயம் கிடைக்க முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
Comments
Post a Comment