குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டனை பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் சட்டப்படி தண்டனை பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?

இந்த கட்டுரையை பல புத்தகங்களை படித்தும், அனுபவம் மூலமாக பெற்ற சட்ட அறிவை பயன்படுத்தியும் எழுதி இருக்கிறேன். எனது பதிவுகளை copy & paste செய்யுங்கள். ஆனால் கட்டுரையாளரின் பெயரை பயன்படுத்துங்கள்.


-----------------------------------------------------------------------

காவல்துறையிடம் கொடுக்கும் எப்ஐஆரில் புகார்தாரரின் சொந்த கையெழுத்து இருக்க வேண்டும்.

புகாரில் குற்றம் புரிந்த எதிரிகள் மற்றும் சாட்சிகளின் பெயர்கள், பயன்படுத்தப்பட்ட ஆயுதம் போன்ற அனைத்து விபரங்களும் இருக்க வேண்டும்.

எப்ஐஆரை பதிவு செய்யும் காவல் அலுவலர், புகார்தாரரின் புகாரை எழுத்தில் எழுதிக் கொள்ளும் போது, அந்த வாக்குமூலப் பதிவானது அவரது கீழமை காவல் அலுவலரால் செய்யப்பட்டால், இருவரும் அதில் கையெழுத்துப் போட வேண்டும். மேலும் அது தொடர்பான சான்றிதழும் இடம்பெற வேண்டும்.

புகார்தாரரின் கையெழுத்தை வெற்றுப் பேப்பரில் பெற்றுக் கொண்டு, பின்னர் அதை நிரப்பிக் கொள்ளும் செயலை எப்போதும் செய்யக்கூடாது.

புகார்தாரரின் முதல் தகவலை பதிவு செய்த பிறகு அதனை புகார்தாரருக்கு படித்துக் காட்டி, அவரும் சரியென ஒப்புக் கொண்டதாக சான்றிதழ் பெறப்பட்டு அதனையும் முதல் தகவல் அறிக்கையுடன் சேர்க்க வேண்டும்.

புகார் கொடுப்பதில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டிருந்தால் அதற்கு சரியான விளக்கம் எப்ஐஆரில் இருக்க வேண்டும்.

எப்ஐஆர் போடப்பட்டவுடன் காலதாமதமின்றி உடனடியாக குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். மேலும் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் எப்ஐஆர் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பதற்கு அத்தாட்சியாக அந்த எப்ஐஆரில் நடுவரின் கையொப்பத்தை தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு மேற்குறிப்பு பெற வேண்டும்.

எப்ஐஆரை குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றம் கொண்டு சேர்த்த காவலர் அதற்கான ஒப்புகையை நீதிமன்றத்தில் பெற்று காவல் நிலையம் திரும்பி பொது நாட்குறிப்பில் பதிவு செய்ய வேண்டும்.

எப்ஐஆரில் எந்தவிதமான திருத்தங்களோ, இடைச்செருகல்களோ, கூடுதலாக சேர்த்தல் போன்றவை இருக்கவேக்கூடாது.

ஒவ்வொரு முதல் தகவல் அறிக்கைக்கும் ஆறு படிகள் இருக்கும். வரிசையாக எண்ணிடப்பட்டிருக்கும். எதிர் தரப்பினர் எப்ஐஆர் முன் தேதியிட்டு தயாரிக்கப்பட்டதாக வாதம் வைப்பர். அதனை தடுக்க எப்ஐஆர் உடனுக்குடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவு செய்யப்படும் வழக்கை காவல் அலுவலர்கள் தனது தனிப்பட்ட குறிப்பு புத்தகம், பொது நாட்குறிப்பு மற்றும் வழக்கு நாட்குறிப்பு ஆகியவற்றில் உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டும்.

கொடிய குற்றங்கள் குறித்து எப்ஐஆர் பதிவு செய்தவுடன் உடனடியாக விரைவு முதல் தகவல் அறிக்கையை (Express FIR) உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

சாட்சிகளின் வாக்குமூலங்கள் அனைத்தும் அசலாக, நீதிமன்றத்திற்கு உடனுக்குடன் அதற்கான ஒப்புகை பெறப்பட்டு அளிக்கப்பட வேண்டும்.

கைப்பறப்படும் அனைத்து சான்றுப் பொருட்களும், உடனுக்குடன் படிவம் 91 ன் கீழ் ஒப்புகையுடன் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

சான்றுப் பொருட்களிலுள்ள தடயங்கள் அழிந்திடாத வகையில் பாதுகாப்புடன் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்.

குற்றச் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மாதிரி வரைபடமும், பார்வை மகஜரும் தயாரிக்க வேண்டும். அனைத்து விதமான கோணங்களிலும் புகைப்படம் எடுக்க வேண்டும். வீடியோ பதிவும் செய்ய வேண்டும்.

சான்றுப் பொருட்களை சரியான சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்ற வேண்டும்.

டி. கே பாசு வழக்கில் கூற்பட்டவாறு குற்றவாளியை கைது செய்தவுடன் அந்த தகவலை அவரது உறவினருக்கு ஒப்புகையின் பேரில் தெரிவிக்க வேண்டும்.

குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலத்தை பெறும் போது மிகச் சரியாக கையாள வேண்டும். ஒப்புதல் வாக்குமூலம் புதிய விவரங்களை வெளிக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும்.

24 மணி நேரத்திற்குள் ரிமாண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலதாமதம் கூடாது.

கைது செய்ததிலிருந்து 15 நாட்களுக்குள் குற்றவாளியை விசாரிக்க அதாவது கஸ்டடி எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 164 ன் கீழ் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க நடவடிக்கை எடுப்பது எப்போதும் நல்லது.

முக்கிய சாட்சியின் வாக்குமூலத்தை குற்றவியல் நடுவர் மூலம் பெற கு. வி. மு. ச பிரிவு 164(5) ன் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Comments