சண்டையில் காயம்பட்டவர் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் காலவரையறையானது குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளிலிருந்து துவங்குமா? அல்லது சம்பவம் நடந்த நாளிலிருந்து துவங்குமா? என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு.
தீங்கியல் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து, காலவரையறைச் சட்டம் பகுதி 7 அட்டவணை 2 ல் கட்டளைகள் 72 முதல் 91 வரை (Part 7, Schedule 2 of the Limitation Act in Articles 72 to 91) குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு சண்டையில் காயம்பட்டவர் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு இழப்பீடு கோரி அந்த வழக்கு எதிரி மீது உரிமையியல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலவரையறை குறித்து கட்டளை 113 கூறுகிறது. மேற்படி கட்டளையின் படி வழக்கு தொடுப்பதற்கான உரிமை எந்த தேதியில் ஆரம்பமாகிறதோ, அந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். அதாவது காயம் ஏற்பட்ட தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் . குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து காலவரையறையை கணக்கிடக்கூடாது. எப்போது ஒரு வழக்கு தொடுப்பதற்கான ஒரு உரிமை ஏற்படுகிறதோ அந்த தேதி தான் காலவரையறை துவங்குகிற தேதியாகும்.
ஒருவேளை விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டு, அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று, உச்சநீதிமன்றத்தால் அந்த வழக்கு தீய நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றம் முடிவு செய்து அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரியை விடுதலை செய்து தீர்ப்பளித்தால், அந்த வழக்கு எதிரி தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டு, அதற்காக இழப்பீடு கோருகிற உரிமை குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அந்த நாளிலிருந்து நாளிலிருந்து துவங்கும். அத்தகைய வழக்குகளில் தான் குற்றவியல் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து காலவரையறை கணக்கிடப்படுமே தவிர, மற்ற வழக்குகளில் குற்றச் சம்பவம் நடைபெற்ற நாளிலிருந்து தான் காலவரையறையை கணக்கிட வேண்டும்.
எனவே ஒரு குற்ற சம்பவத்தில் காயம்பட்டவர் இழப்பீடு கோரி அந்த சம்பவம் ஏற்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
S. A. NO - 1182/2014, DT - 9.3.2015
Renganathan Vs Narayanan
2015-2-LW-625
Comments
Post a Comment