*வரதட்சணை* *கொடுமை: கோர்ட்* *தீர்ப்பில் மாற்றம்*
*நாள்: செப் 16,2018*
*புதுடில்லி : 'வரதட்சணை கொடுமை தொடர்பான புகார் மீது, கமிட்டி அமைத்து விசாரணை நடத்திய பின், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்ற, தன் முந்தைய உத்தரவில், உச்ச நீதிமன்றம் மாற்றம் செய்துள்ளது. 'புகார் தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி, தேவைப்பட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம்' என, தற்போது உத்தரவிட்டுள்ளது.*
*வரதட்சணை கொடுமை தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷன்களில் பெண்கள் புகார் அளித்ததும், கணவன் மற்றும் அவரது உறவினர்களை, போலீசார், உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.*
*இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம், ஜூலையில் வழங்கிய உத்தரவு: பெண்கள், பொய் புகார் அளிப்பதன் மூலம், அப்பாவியான கணவன் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால், குடும்ப வாழ்க்கையே பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.*
*கணவன் - மனைவி இடையே, சமரசம் ஏற்படாமல் போகவும், இந்த கைது காரணமாகிறது. எனவே, வரதட்சணை கொடுமை தொடர்பான புகாரில், மூன்று நபர் கமிட்டி அமைத்து, தீவிர விசாரணை நடத்திய பின், கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.*
*இந்த உத்தரவால், வரதட்சணை கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கான நீதி மறுக்கப்படுவதாக, தன்னார்வ தொண்டு நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.*
*இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கியது.*
*வரதட்சணை புகார் மீது, கமிட்டி அமைத்து விசாரணை நடத்த தேவையில்லை. புகார் உண்மையாக இருக்குமேயானால், போலீசாரே உடனடியாக கைது செய்து, நடவடிக்கையை மேற்கொள்ளலாம். வரதட்சணை கொடுமை சட்டம், தவறாக பயன்படுத்துவதை தடுப்பது குறித்து, பார்லிமென்ட் தெளிவான சட்டங்களை வகுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்*
Comments
Post a Comment