ஒரு புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து உச்சநீதிமன்றம் "லலிதா குமாரி Vs உத்திர பிரதேச அரசு (2014-2-SCC-1)" என்ற வழக்கில் பின்வரும் கட்டளைகளை பிறப்பித்துள்ளது.

ஒரு புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது குறித்து உச்சநீதிமன்றம் "லலிதா குமாரி Vs உத்திர பிரதேச அரசு (2014-2-SCC-1)" என்ற வழக்கில் பின்வரும் கட்டளைகளை பிறப்பித்துள்ளது. 

பிடியாணை வேண்டா வழக்குகள் குறித்து (Cognizable Offence) ஒரு புகார் தரப்படுமேயானால், எந்த வகையான முதல்நிலை விசாரணையும் செய்யாமல் கு. வி. மு. ச பிரிவு 154 ன் கீழ் முதல் தகவல் அறிக்கையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். 

அளிக்கப்பட்ட தகவல் பிடியாணை தேவைப்படும் வழக்காக இருந்தால், அந்த தகவலின் மீது ஒரு முதற்கட்ட விசாரணையை நடத்தி, அந்த தகவலில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் பிடியாணை வேண்டா வழக்கு சம்மந்தப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும். 

அந்த முதற்கட்ட விசாரணையில் புகாரில் கூறப்பட்டுள்ள சங்கதிகள் பிடியாணை வழக்கிற்கான முகாந்திரத்தை ஏற்படுத்தினால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட வேண்டும். முதற்கட்ட விசாரணையில் புகார்தாரர் அளித்த புகாரின் மீது எந்தவொரு மேல்நடவடிக்கையும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதி, அந்த புகாரின் மீதான விசாரணையை முடிக்கும் நிலை ஏற்பட்டால், அது குறித்து உடனடியாக புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும். அதிக பட்சம் 7 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த புகார் என்ன காரணத்திற்காக மேற்கொண்டு விசாரிக்கப்படவில்லை என்பதையும் புகார்தாரருக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும். 

பிடியாணை வேண்டா வழக்கு குறித்து புகார் தரப்படுமேயானால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் கடமையை காவல்துறை அதிகாரி தவிர்க்கக் கூடாது. பிடியாணை வேண்டா வழக்கு என்று தெரிந்திருந்தும், அந்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய தவறும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

முதற்கட்ட விசாரணையானது பிடியாணை வேண்டா வழக்கு சம்மந்தப்பட்ட புகாரா? என்பதை கண்டறிவதற்காக மட்டுமே நடத்தப்பட வேண்டும். 

எத்தகைய வழக்குகளில் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட வேண்டுமென்பது அந்தந்த வழக்கு சங்கதிகளை பொறுத்தது. கீழ்க்கண்ட வழக்குகளில் முதற்கட்ட விசாரணை நடத்தப்படலாம். 

1. குடும்ப பிரச்சினைகள்
2. வியாபாரம் சம்பந்தப்பட்ட குற்றங்கள் 
3. மருத்துவ கவனக்குறைவு வழக்குகள் 
4. ஊழல் வழக்குகள் 
5. குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மிக நீண்ட காலதாமதமான வழக்குகள். அந்த குற்றச் செயல் சம்மந்தமாக புகார் அளிப்பதற்கு 3 மாதங்களுக்கும் மேலான நிலையில், அந்த காலதாமதத்திற்கான சரியான விளக்கம் தராத வழக்குகள் 

மேலே கூறப்பட்டுள்ளவைகள் ஒரு உதாரணத்திற்காக கூறப்பட்டவைகளாகும். இதைத் தவிர முதற்கட்ட விசாரணை தேவைப்படும் மற்ற வழக்குகளிலும் அம்முறையை பின்பற்ற வேண்டும். 

எதிரி மற்றும் புகார்தாரரின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் முதற்கட்ட விசாரணையை ஒரு குற்ற கால அவகாசத்தில் செய்து முடிக்கப்பட வேண்டும். அதிகபட்சம் 7 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் முதற்கட்ட விசாரணையை முடிக்க முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை பொது நாட்குறிப்பில் குறிப்பிட வேண்டும். 

பொது நாட்குறிப்பு / காவல் நிலைய நாட்குறிப்பு ஆகியவை காவல் நிலையத்தில் அளிக்கப்படும் அனைத்து புகார்கள் குறித்தும் பதிவு செய்யப்படும் ஒரு ஆவணமாக உள்ளது. எனவே பிடியாணை வேண்டா வழக்கு குறித்து ஒரு தகவல் பெறப்பட்டவுடன், அந்த தகவலின்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டாலும் அல்லது முதற்கட்ட விசாரணை மட்டும் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அதனை நாட்குறிப்பில் குறிப்பிடப்பட வேண்டும். 

எனவே ஒரு புகார் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டு, அந்த புகார் பிடியாணை வேண்டா வழக்கு சம்மந்தப்பட்டதாக இருந்தால் கட்டாயம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. 

CRL. OP. NO - 12963/2014, DT - 21.5.2014

Kalavathy Vs Inspector of police, Vadakki palayam, Pollachi Taluk, Covai District 

2014-1-TLNJ-CRL-515

நம் நாட்டில் ஏராளமான சட்டங்கள் உள்ளது. ஆனால் அவற்றை புரிந்து கொள்ள முடியாத அப்பாவிகளாக மக்கள் இருக்கிறார்கள். அதனால் தான் பொதுமக்கள் பலர் தாங்கள் கொடுக்கும் புகார்கள் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, CSR தருவதில்லை என்று புலம்புகின்றனர். 

காவல் நிலையங்களில் பொதுமக்கள் தாங்கள் கொடுக்கும் புகார்களை காவல்துறையினர் ஏற்க மறுத்தாலோ அல்லது நடவடிக்கை எடுக்க மறுத்தாலோ அல்லது FIR பதிவு செய்ய மறுத்தாலோ அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்ட அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். 

உச்சநீதிமன்றம் "லலிதா குமாரி" வழக்கில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் நிலையாணை ஒன்றை பிறப்பித்திருக்கிறார். Standing Instruction - 58/2013, DT - 27.11.2013. 

இதன்படி பிடியாணை வேண்டா வழக்குகளில் கு. வி. மு. ச பிரிவு 154 ன்படி காவல்துறையினர் கட்டாயம் FIR பதிவு செய்ய வேண்டும். தவறினால் அது இ. த. ச பிரிவு 166A ன்படி ஒரு வருடம் தண்டனைக்குரிய குற்றமாகும். 

FIR பதிவு செய்யாத காவல்துறை அதிகாரி மீது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கு. வி. மு. ச பிரிவு 200 ன் கீழ் தனிப்புகார் தாக்கல் செய்து அதில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 166 ன் கீழ் FIR பதிவு செய்யாத அதிகாரியை தண்டிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தால் கட்டாயம் தண்டனை கிடைக்கும். 

இதற்காக தவறான முடிவுகளை எடுத்து வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.
........................................................................

Comments